×

பெண் வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர், 2வது மனைவி உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

*கோபி நீதிமன்றம் தீர்ப்பு

கோபி : கோபியில் இளம்பெண்ணை வரதட்சணை கொடுமை செய்த அவரது கணவர், மாமனார், மாமியார் மற்றும் கணவரின் 2-வது மனைவி உட்பட 6 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோபி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஈரோடு மாவட்டம், கோபி ராமநாதன் வீதியை சேர்ந்தவர் காஜா மைதீன் (55). இவரது மகள் ஆயிசாவுக்கும் (27) கோவை வடவள்ளியை சேர்ந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தஸ்தகீர் (68) என்பவரின் மகன் யாசர் அராபத்துக்கும் (41) கடந்த 21.8.2014ல் கோபியில் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது, ஆயிசாவிற்கு வரதட்சணையாக 50 சவரன் நகையும், யாசர் அராபத்திற்கு 5 சவரன் நகை மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சீர் வரிசை பொருட்கள் வழங்கி உள்ளனர்.திருமணத்திற்கு பின்னர் கணவர் வீட்டிற்கு சென்ற ஒரு வார காலத்திலேயே மேலும் 5 லட்சம் ரூபாய் பணம், சீர் வரிசை பொருட்கள், கார், ரேடோ வாட்சு என பல்வேறு பொருட்களை வரதட்சணையாக வாங்கி வருமாறு கணவர் யாசர் அராபத், மாமனார் தஸ்தகீர், மாமியார் சம்சத் பேகம் (67) ஆகியோர் கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளனர். வரதட்சணை வாங்கி வந்தால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என்று கூறி உள்ளனர். இதனால் திருமணமான 15 நாளில் பெற்றோர் வீட்டுக்கு ஆயிசா திரும்பினார்.

இதைத்தொடர்ந்து பொள்ளாச்சியை சேர்ந்த நூருல் பாஷா என்பவரது மகள் ஷப்னா (37) என்பவரை யாசர் அராபத் 2-வது திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஆயிசா, கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரில் கணவர் யாசர் அராபத், மாமனார் தஸ்தகீர், மாமியார் சம்சத்பேகம், உறவினர்கள் வடவள்ளி தென்றல் நகரை சேர்ந்த முகமது இப்ராகிம் கான், 2-வது மனைவி ஷப்னா, ஷப்னாவின் தந்தை நூருல் பாஷா உள்ளிட்ட 23 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை கோபியில் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விஜய் அழகிரி, வரதட்சணை கொடுமை செய்ததாகவும், 2-வது திருமணம் செய்ததற்காகவும் ஆயிசாவின் கணவர் யாசர் அராபத், மாமனார் தஸ்தகீர், மாமியார் சம்சத்பேகம் ஆகியோருக்கு இரு பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்த ஷப்னா, 2-வது திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக ஷப்னாவின் தந்தை நூருல் பாஷா, உறவினர் முகமது இப்ராகிம் கான் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 6 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயிசாவின் மாமனார் தஸ்தகீர் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தபோது லஞ்சம் வாங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும், மாமியார் சம்சத் பேகம் வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post பெண் வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர், 2வது மனைவி உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Gopi ,Gobi ,
× RELATED புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்..!!